Wednesday, January 11, 2012

வெளிச்சப் புள்ளி

"அம்மா, நான் படிச்சு வேலைக்கு போனப்புரம் நாம மட்டும் தனியா இருந்திடலாம். அப்பாவும், தம்பியும் இந்த வீட்டிலேயே இருக்கட்டும். நாம மட்டும் நிம்மதியா, சந்தோஷமா இருக்கலாம்" என்று பெரிய மனுஷி போல பேசும் கவிதாவை ரஞ்சனி ஆச்சரியத்தோடும், ஆர்வத்தோடும் கவனித்தாள்.

"என்னம்மா நான் சொல்றது. இப்ப பிளஸ் டூ வந்திட்டேன். இன்னமும் மூணு வருஷம் கழிஞ்சா, நான் வேலைக்கு போக ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் இந்த குடிகார அப்பாகிட்டயிருந்து உனக்கும், எனக்கும் விடுதலை. அதையும் விட முக்கியம், இப்படி நீ வீடு வேலை செஞ்சுக் கவலைப் பட வேண்டாம்"

ரஞ்சனிக்கு அவள் பேசப் பேச வியப்பாக இருந்தது. எவ்வளவு சின்னப் பெண். எவ்வளவு தீர்மானமாக பேசுகிறாள் என்று யோசனையாக இருந்தது. கவிதாவின் வயதில், பிரகாசத்தை தான் கல்யணம் செய்து விட்டோம் என்பது ரஞ்சனிக்கு ஞாபகம் வந்தது.

"சரி. அதெல்லாம் நீ படிச்சு முடிச்சதுக்கப்புறம் முடிவு செய்துக்கலாம். போய் நாளைய பரீட்சைக்கு படிக்கற வேலையை பாரு" என்று கவிதாவின் பேச்சுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டு படுக்கையை விரித்து, உறங்க ஆயத்தமானாள்.

பிரகாசத்துக்கும், அவளுக்குமிடையே நிறைய வயது வித்தியாசமில்லை. பள்ளிப் படிப்பு முடிந்த கையோடு, அவளது பதினேழாவது வயதிலேயே, கல்யாணமாகி விட்டது. புகுந்த வீட்டில் பிரகாசமும், அவனது இரு அண்ணன்களும், மற்றும் அவனது அப்பாவும் சேர்ந்து நூற்பு ஆலை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அவளது வாழ்க்கையின் சந்தோஷங்கள் எல்லாமே அதைத் தொடர்ந்த பதிமூன்று வருடங்களில் - அவளது முப்பது வயதுக்குள் முடிந்து விட்டது. பின்னர் எல்லாமே போராட்டம்தான்.

உறக்கம் வராமல் வெறுமே போர்வையை போர்த்திக் கொண்டு உறக்கத்தை தேடுவதையும் விடக் கொடுமையான விஷயம் எதுவுமில்லை என்று ரஞ்சனிக்கு தோன்றியது. வாழ்க்கையில் என்னுடைய கஷ்டங்கள், எல்லாவற்றுக்கும் சமமாய் சந்தோஷமும் அனுபவித்து விட்டேன். ஆனால், கவிதாவின் முகத்தில் அந்த வயதுக்கே உரிய துடுக்குத்தனமும், சந்தோஷமும் கூட இல்லாமல், துக்கத்திலேயும், அச்சத்திலும், வெறுப்பிலுமே வளர்ப்பாகி விட்டதே என்று என்னும் போது அவளுக்குள் துக்கம் பொங்கியது. கண்களில் நீர் துளிர்த்தது. ஒரு தூக்கம், கண்களை சுழற்றி மயங்கிய போது, வெளியே கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.

"பிரகாசம் வந்தாச்சுங்களா?" என்ற குரல் கேட்டு கதவைத் திறந்தாள். கேட்டவனுக்கு முப்பது வயது இருக்கலாம். அவனுடன் இரண்டு பேர், கல்லூரி மாணவர்கள் போன்ற தோற்றம் தென்பட இருந்தார்கள்.

"இல்லையே, நீங்க யாரு?" என்று கேட்டாள் ரஞ்சனி,

"நான் இந்த தெரு முனையில டாஸ்மாக் கடை நடத்தற ரங்கசாமியோட மகன். இவங்க என்னோட நண்பர்கள். அப்பா எனக்கு போறுப்பேயில்லைன்னு அடிக்கடி சொல்லுவாரு. அதான் இன்னைக்கு கடையில பாத்தப்ப பிரகாசம் ரெண்டாயிரம் ரூபாய் தர வேண்டியுருக்குன்னு கண்டு பிடிச்சேன். பசங்ககிட்ட கேட்டப்ப வீடு இங்க இருக்குன்னு சொன்னங்க. அதுதான் விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தேன்"

"யாரும்மா அது?" என்று கதவைத் திறந்தபடி கவிதா வெளியே வந்தாள்.

"உள்ளே போடி. ராத்திரி வேலையில... போய் படிக்கற வேலையைப் பாரு" என்று அவளை அதட்டி விட்டு, அவர்களிடம் மெல்லிய தொனியில் பேசத் தொடங்கினாள்.

"இங்க பாருங்க. அவர் வந்தாருனா, அவர்கிட்ட எப்படி திரும்ப பெருவீங்களோ அதைப் பத்தி எனக்கு கவலையில்ல. டாஸ்மாக் கடையில குடிச்சு கடன் ஆச்சுன்னா உங்களால முடிஞ்சா டாஸ்மாக் கடையிலையே பைசல் பண்ணுங்க. அதை விட்டு, வீட்டுப் பக்கம் வந்து சத்தம் போட்டீங்கனா, வீட்ல வந்து ரகளை செய்யறதா போலிசுக்கு புகார் குடுக்க வேண்டியுருக்கும். நாளையிலிருந்து, இந்தப் பக்கம், எதாவது சொல்லிட்டு வந்தா நடக்கறதே வேற. இப்ப இடத்தைக் காலி பண்ணுங்க." 'பட்'டென்று அவர்கள் முகத்தில் அறைவது போல் கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தாள்.

இந்த அவமானங்கள் இன்றா, நேற்றா, கடந்த பத்தாண்டுகளாய் இதிலேயே, உழன்று இவற்றையெல்லாம் கடந்து வாழப் பழகி விட்டாள் ரஞ்சனி. முதன், முதலில் ஒருவன் கடன் பணம் திரும்பக் கேட்ட பொது, அவள் தன் கழுத்திலிருந்த சங்கிலி ஒன்றை விற்றுக் கொடுத்து அதை தீர்த்தாள். பின்னர் அது தொடர்கதையாகி எதையுமே தர இயலாமல், எந்த தீர்வுமில்லாமல் ஆன போதுதான் அவள் தீர்மானமாய் யோசிக்க ஆரம்பித்து, எதிர் கொள்ளத் துணிந்தாள்.

அன்றே இப்படி எல்லாவற்றையும் எதிர் கொண்டு இருந்தால், தான் எதையுமே இழந்திருக்க மாட்டோமே என்றும் கூட சில சமயங்களில் ரஞ்சனி யோசிக்கத்தான் செய்வாள்.

வெளியே, தெருவில் சத்தம் கேட்டது. அநேகமாய் பிரகாசமாய் இருக்கக் கூடும். கல்யாணமான புதிதில் , அவன் அவளை தாங்கு, தாங்கு என்று தாங்கியது ரஞ்சனியின் நினைவுக்கு வந்தது. எல்லாமே சந்தோஷமான காரியங்கள்தான். ரஞ்சனியின் தங்கை கல்யாணத்தின் போது, இக்கட்டான சூழ்நிலையில், பிரகாசம் அவன் தந்தையிடம் பொய் சொல்லி ஒரே இரவில் ஐம்பதினாயிரம் ருபாய் வாங்கித் தந்தான்.

ரஞ்சனியின் அப்பா, வட்டியுடன் மூன்று வருடங்கள் கழித்து திருப்பித் தந்த போது, வட்டி பணத்தை மட்டும் தனியே சேர்த்து வைத்து, தீபாவளியின் போது, மாமியார், மாமனாருக்கு பட்டுச், சேலை, வேஷ்டி, சட்டை வாங்கித் தந்தான்.

ரஞ்சனியை பொறுத்த வரையில், எல்லாமே சிறப்பாய் சென்றுக் கொண்டிருந்தது கவிதா பிறக்கும் வரையில். அவள் பிறந்தவுடன் வீட்டை துரதிர்ஷ்டம் குடி கொண்டது. நூற்பு ஆளை குடோனில் தீப்பற்றி சரக்கும், மஷினரியும் நஷ்டம். அத்தனைப் ப்ரச்சனைகளுக்குமிடையே உறவினர்களிடம் அவமானப்படும்படி, பிரகாசத்தின் தங்கை வேற்று சாதிக்கார டிரைவருடன் ஓடிப் போனது. இப்படி ஒவ்வன்றாய், வீடு துண்டானது. அவரவர் எப்படிப் பிழைத்தாலும் போதும் என்று டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று சென்றார்கள்.

ரஞ்சனியின் பிறந்த வீடு வசதியானது அல்ல என்றாலும், அவர்களையும் ஏற்றுக் கொண்டு, வாழ்க்கையை தொடர முடிந்தது. அதுவும் ஒரு காலம் வரையில், பிரகாசம் வேலை, வெட்டி இல்லாமல் கடன்களை மட்டும் ஏற்றுக் கொண்டு, ரஞ்சனியின் சொற்ப நகைகளையும் இழந்து கொண்டிருந்த நாட்கள் அவை.

பின்னர் ஓர் கால கட்டத்தில், எப்படியும் பிழைக்க வேண்டுமே என்று மதுரைப் பக்கம் சென்றார்கள். பிரகாசம் வேறு வழியிலாமல் ஒரு நூற்பு ஆலையிலே பஞ்சு கோடான் பொறுப்பேற்றுக் கொண்டு வேளைக்கு செல்ல ஆரம்பித்தான். அவனுக்கு பழைய நாட்களை நினைக்க வெறியும், துக்கமும், பொங்கும். எனவே, ஏமாற்றங்கள் குடிப் பழக்கத்தில் அவனை மூழ்க அடித்தது. அதனால் வயிற்றுப் பிழைப்புக்காகவும் கடன் தொல்லைக்காகவும் ரஞ்சனி வீடுகளில் வேலை செய்ய ஆரம்பித்தாள். வாழ்கை ஒரு முடிவற்ற போராடக் களமாய் அவர்களுக்குத் தோன்றியதில் வியப்பில்லை

கதவு தட்டப் படும் சத்தம் கேட்டது. மெதுவாய் எழுந்து தாழ்ப்பாளை திறந்தாள். பிரகாசம் உள்ளே நுழைந்தான்.

கொல்லைப்புறம் சென்று முகம், கை, கால் கழுவி சாப்பிட உக்கார்ந்தான். அவன் உள்ளே நுழைந்தவுடன் சொல்லி வைத்தார்ப் போல, கவிதா விளக்கை அணைத்து விட்டு உறங்க ஆயத்தமானாள்.

சாப்பிட்டவாறே "என்ன ரஞ்சனி ஒரு மாதிரியிருக்க" என்றான்.

"ஒண்ணுமில்ல

"இல்ல, என்னவோ போலயிருக்க உன்னோட பழைய சிரிப்பும், சந்தோஷமும் எதுவுமேயில்லை. எல்லாமே, இந்த பொண்ணு கவிதா பிறந்ததிலிருந்து பாழாடிச்சு"

"அப்படியெல்லாம் சொல்லாதீங்க. யாரோ ரங்கசாமியாம், அவரோட பையன் வந்து சத்தம் போடறான். டாஸ்மாக் கடையில ரெண்டாயிரம் ருபாய் கடனாமே. ஏன் இப்படி?"

"அதுவா, பஞ்சு கொடௌன்ல வேலை. ஆஸ்த்மா தொல்லை வேற. கொஞ்சம், கொஞ்சமா கூடி இப்ப ரெண்டாயிரம்கறான். ஞாயமா பாத்தா ஆயிரத்து ஐநூறுதான் இருக்கணும். கல்லால இருக்கற பையன் ஐநூறு ரூவா சேர்த்து சொல்லிட்டான்

"அதெல்லாம் இருக்கட்டும். வயசு வந்த பொன்னும், விவரம் தெரியாத பையன்னு இரண்டு பேர் வீட்ல இருக்கறச்ச, இப்படி சாக்கடயில விழுந்து எழுந்தா எங்க கதியென்ன?” அவளுக்கு உதட்டை பீறிக் கொண்டு அழுகை வந்தது.

பிரகாசம், 'சட்'டென்று சாப்பாட்டை விட்டு எழுந்தான்.

"நீங்க சாப்பிடுங்க. பாவம் கஷ்டப்பட்டு உழைக்கறீங்க. எனக்குத்தான் கொஞ்சம் பொறுமையிலீங்க"

"இல்ல ரஞ்சனி ஒரு முடிவிலதானிருக்கேன். நீ சாப்பிடு பேசலாம்.

அவன் சாப்பிட்ட தட்டிலேயே சோற்றைப் போட்டுக் கொண்டு அவள் சாப்பிடத் துவங்கினாள்.

"அன்ணன் மும்பையிலிருந்து போன் பேசியருந்தார். இந்தோனேசியாவில இருக்கற மில்லு ஒண்ணுல வேலைஇருக்காம் மாசம் இருபதினாயிரம் ருபாய் சம்பளம் இந்திய மதிப்புக்கு கிடைக்கலாம். நாம குடும்பத்தோட போயிடலாம். என்ன சொல்ற?

"அது எங்க இருக்குங்க? நம்மால அங்க பிழைக்க முடியுமா?"

"பிழைச்சுதான் தீரனும். வேற வழி. ஒரு மாசத்துல எல்லாம் ரெடி பண்ணனும். போகறதுக்கு செலவுக்கு அண்ணன் கொஞ்சம் தரேன்னு சொல்லி இருக்காரு. மீதியை நாம எதாவது செஞ்சு முடிவு பண்ணிக்கலாம். இந்த கவிதாவை யாருக்காவது கட்டி வெச்சா வீடு உருப்படியாயிடும்னு ஜோசியர் கூட சொன்னார். அந்தப் பொண்ணு போனவுடன் வீடும் சரியாயிடும். நமக்கு மேல அவப் போகற வீட்டுல செழிப்பாயிருப்பாளாம்.

"ஆமாங்க" என்று ஆமோதித்தாள் ரஞ்சனி.

"அதுக்கப்புறம் என் பையன் தலை எடுப்பான். அவனை வெச்சு திரும்பவும் நான் ஒரு நூற்பு ஆலை கட்டுவேன். நிச்சியமா நாம இழந்த செல்வத்தையும், செல்வாக்கையும் திரும்ப அடைஞ்சே தீருவேன். யாருனால, யாருக்கு நஷ்டம்னு தேரியாம குடும்பமே சிதறி ஒவ்வொருத்தரும் கஷ்டப்படறோமே, அதுக்கெல்லாம் ஒரு முடிவு வந்தே தீரனும். பாரு ரஞ்சனி"

"இருக்கட்டும் , பரவாயில்லை, படுக்கையை விரிச்சு வெச்சிருக்கேன். வந்து படுங்க"

"பாரு. பழைய செல்வாக்கையும், செல்வதையும் திரும்ப பெறலைனா நான் பிரகாசம் இல்ல..." என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்லியபடி உறங்கிப் போனான் பிரகாசம்.

ரஞ்சனி அவனையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அவளையறியாமல் உறங்கிப் போனாள் அன்றைய கனவில் அவளுக்கு டாஸ்மாக் பையனும், அந்த இரண்டு இளைஞ்சர்களும்தான் வந்தார்கள். திடுக்கிட்டு விழித்துப் பார்த்த போது அருகில் பிரகாசம் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

No comments: