Monday, December 12, 2011

ஐந்து பிழைகள்

ஐந்து பிழைகள்

பெரியோர்கள், மனிதர்கள் தம்மையறியாமல் செய்யும் பிழைகள் என்று ஐந்து பிழைகளை அடையாளம் காட்டுகிறார்கள்.

தெரிந்தே செய்வது தவறு. தம்மை அறியாமல் செய்வது பிழை. பிழைகளை நாம் உணர்ந்து திருத்திக் கொண்டு நல்ல மனிதர்களாய் வாழ முயல வேண்டும்.

பிறருக்கு துயர் கொடுத்துக் கொண்டே தாம் இன்பமாய் வாழ வேண்டும் என்று ஒருவன் நினைப்பதை முதலாவது பிழை என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.

சிலர் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு பல விதத்தில் துயரம் கொடுப்பவர்களாய் இருக்கிறார்கள். ஆயினும், அதனை அவர்கள் உணராமல் மிகுந்த சந்தோசம் கொண்டிருகிறார்கள். பொறுப்பற்ற குழந்தைகள், பொறுப்பற்ற கணவன்மார்கள், பொறுப்பற்ற தலைவர்கள் என்று சமுதாயத்தின் ஒவ்வொரு நிலைக்கலனிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்கள் சந்தோஷமாய் இருப்பதற்காக, அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் துன்பத்தையும், துயரத்தையும் பொறுத்துக் கொள்கிறார்கள். இந்த உண்மை திடீரென்று ஒரு நாள் புலப்படும்போது தான் எவ்வளவு சுயநலவாதியாய் இத்தனைக் காலமும் வாழ்ந்து விட்டோம் என்று எண்ணி வெட்கமுருகிறான்.

அப்படிப் பட்டவர்கள் அதனை விரைவில் உணர வேண்டும். தாமும் சந்தோஷம் கொண்டு, பிறரும் சந்தோஷம் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். அவ்வாறு அவர்கள் மாறுகின்ற போது, அவர்களும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் தங்களது ஒவ்வொரு தினத்தையும், மகிழ்ச்சியான தினமாக சந்தோசம் கொள்கிறார்கள்.

நன்னடத்தையும், தொண்டு மனபாண்மையும் இல்லாமல் வாழ்ந்துக் கொண்டு, ஆயுளின் அந்திமக் காலத்தில் நிம்மதியாய் இருக்க முடியும் என்று எதிர்ப்பார்ப்பதை இரண்டாவது பிழையாக பெரியோர்கள் சொல்கிறார்கள்.

சங்க காலம் தொட்டு, இன்றைய கம்ப்யூட்டர் காலம் வரை முதுமையை நோய் என்று கூறி வருகிறார்கள். குழந்தைக்கு தாயின் அன்பும், அரவணைப்பும் மட்டும் போதும். ஆனால், முதுமைக்கு சமுதாயத்தின் ஆதரவும், அங்கீகாரமும் தேவைப் படுகிறது.

இன்றைய நம்முடைய செயல்கள், நாளைய நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது. சிறிய வயதில், குழந்தைகளாய் இருக்கையில், ஒரு நல்ல மனிதனாய் வாழ எதையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று நல்ல நூல்கள் எல்லாம் சொல்கிறதோ, அவற்றையெல்லாம் கல்வியில் கற்றுக் கொள்கிறோம். பின்னர் நாம் நன்றாக வாழ வேண்டும், நம்மைச் சார்ந்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலத்தில் ஆயுளைத் தொலைத்து ஆதிக்கம் செலுத்துகிறோம். அந்திமக் காலத்தில் நாம் சேர்த்தது என்ன என்று கணக்குப் பார்கையில் வெறுமையை உணர்கிறோம்.

இதுவா வாழுக்கை? இல்லை. நாம் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், பிறர்க்கென வாழும் சிந்தை கொண்டிருந்தால், நம் ஆயுளின் கடைசி நாளது வரை சந்தோஷம் கொண்டு வாழலாம். தம் வாழ்க்கையைப் பின்பற்றி வாழும்படி வாழ்ந்த நம் பெரியவர்கள் போல வாழ முயல வேண்டும். அவர்களது புகழ் இவ்வுலகு உள்ளவரையிலும் நிலைத்து நிற்கும்.


முட்டாள்த்தனமாயும், மூர்கத்தனமாயும் காதல் கொள்வதை மூன்றாவது பிழை என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்


இனக்கவர்ச்சி மட்டுமே காதல் என்று முன்னிலைப்படுத்தப்பட்டு விட்ட இன்றைய சூழலில் காதல் மூர்க்கமும், முட்டாள்த்தனமும் நிறைந்தது ஆகி விட்டது.

காதலில் கண்கள் கலக்கிறது, பினனர் இதயங்கள் இடம் மாறுகிறது என்று பட்டியலித்டுப் பல கவிஞ்சர்கள் சொல்லி விட்டார்கள். அனால், அது அறிவை மயக்குகிறது என்பது குறித்து யாரும் கூறுவதில்லை. அறிவை விடுத்துச் செய்கின்ற எந்தச் செயலுமே முட்டாள்தனமானதுதான். காதலும் கூட...

உண்மைக் காதலில் அழகு, கவர்ச்சி எல்லாமே இரண்டாவது பட்சமாகி விடுகிறது. இணையான சிந்தனைகள், இணக்கமான சூழ்நிலைகள் இவைதான் முக்கியமாகிறது. அப்படிக் கொண்ட காதல் நிலைத்து விடுகிறது.

அந்தக் காதல் யோசிக்கும். தனக்குள்ளே பல கேள்விகள் கேட்டுக் கொண்டு, அதிலும் ஒரு முடிவுக்கு வந்த பின்னர்தான் தன்னிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் காதல் என்பதை உணரும். பின்னர் இணையும். அவ்வகையில் கொள்ளும் காதல்களுக்கு தடைகள் எதுவும் இல்லை. அதில் ஒவ்வொரு நொடியும் காதல். காதல்தான் வேறு ஒன்றுமில்லை.

வாழ்க்கையில் பெற வேண்டியவற்றை சுலபமாகவும், முயற்சியில்லாமலும் பெற முடியும் என்று ஆசைப்படுவதை பெரியோர்கள் நான்காவது பிழையாக சொல்கிறார்கள்.

நம்மிடையே பலர் தாங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் விதிதான் என்று நம்புகிறார்கள். அவர்களில் சிலர் வெற்றியடைந்தவர்கள். சிலர் அவ்வளவு சொல்லிக் கொள்ளும்படி வெற்றியடையாதவர்கள்.

ஒரு அடி முன்னே நடக்க வேண்டும் என்றாலும் கூட நம் கால்களை முன்னே நகர்த்த வேண்டியுள்ளது. ஒரு குழந்தை நடக்க ஆரம்பிக்கும் முன் எவ்வளவு முறை விழுந்து எழுகிறது? அப்போதும் அது கடினமாய் உள்ளது என்று தன முயற்சியை நிறுத்தி விடுவதில்லை. குழந்தை தான் நடக்க வேண்டும், ஓடி விளையாட வேண்டும் என்று மனதுக்குள் ஆசைப்பட்டுக் கொண்டு இதையெல்லாம் செய்வதில்லை. எந்த விதமான எதிர்ப் பார்ப்பும் இல்லாமல் செய்யும் ஒரு காரியத்துக்கு, இவ்வளவு கடின உழைப்பும், முயற்சியும் ஒரு குழந்தைக்கே தேவைப்பட்டால், மனதில் எதிர்ப்பார்ப்புகளை அடுக்கிக் கொண்டு, எந்தவிதமான முயற்சியும் செய்யாமல், சுலபமாக கிடைத்து விடும் என்று ஆசைப்படுவது எவ்வளவு பிழை.

விதியை காரணம் காட்டுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவுதான் சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்து விட்டாலும் கூட, அல்லது அமையாவிட்டாலும் ஒரு மனிதனின் வெற்றித் தோல்விக்கும் அவன் செய்கைகளே முதல் காரனமாய் அமைகிறது. சரியான சமயத்தில், சரியான காரியத்தை சிந்தித்துச் செயல்படுத்தும் ஒவ்வொருவரும் எவ்வளவு சறுக்கல்கள் ஏற்ப்பட்டாலும் உச்சத்தை எட்டிப் பிடித்தே தீருவார்கள்.

பிறரிடம் நம்பிக்கையும், நாணயமும் இல்லாமல் இருந்து கொண்டு நல்ல நட்பினை எதிர்பார்ப்பதை ஐந்தாவது பிழையாக பெரியோர்கள் சொல்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு துன்பம் நேருகின்றபோது, அத்துன்பத்தை உடனே தீர்ப்பதை சிறந்த நட்புக்கு அடையாளமாய்ச் சொல்கிறார் திருவள்ளுவர். நல்ல நட்பிற்கு மிகச் சிறந்த உதாரணம் துரியோதனன், கர்ணனிடம் கொண்டிருந்த நட்பு.

ஒருவரிடம் நாம் நம்பிக்கையும், நேர்மையும் கொடுக்காமல், அவரிடத்தில் நல்ல நட்பினை எதிர் பார்க்க முடியாது. தவறு செய்கின்ற பொது, முகத்துக்கு நேரே, நீ செய்வது தவறு என்று சுட்டிக் காட்டியும், சரியான காரியத்தை தயங்காமல் பாராட்டிச் சொல்வதும் நட்பு. அப்படி நடந்து கொள்ள விட்டால், அங்கே, நட்பைவிட, முகஸ்துதிதான் இறுக்கும்.

ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள, அவரது நண்பர்களைப் பற்றி தெரிந்து கொண்டால் போதும் என்று சொல்கிறார்கள். நாம் நல்ல நட்பை பிறருக்கு கொடுக்காமல், பிறரிடம் நல்ல நட்பை எதிர்ப்பார்க்க முடியாது.

ஒருவரை, ஒருவர் புரிந்துக் கொண்டு, எந்தச் சூழ்நிலையிலும் நேர்மையைக் கைவிடாமல், நம்பிக்கையுடன் துணை நிற்கும் நட்புக்கு ஈடாக எதுவுமில்லை. அந்த நட்புக்காக எதையும் இழக்கலாம்.

No comments: