Thursday, January 12, 2012

முடிவும், மாற்றமும்

கண்ணனை அவன் அம்மா விடியர்க் காலை ஐந்தரை மணிக்கெலாம் எழுப்பி விடுவாள். எழுந்தவுடன் பின்பக்கம் சென்று பல விளக்கி, முகம் கழுவி உள்ளே வந்தவுடன் சூடான காபியுடன் அம்மாவின் கரம் சமையலறையிலிருந்து வெளிப்படும்.

பான்ட், சர்ட் மாட்டிக் கொண்டு சைக்கிளை மிதிக்க தயாரானால் காரியரில் கெமிஸ்ட்ரி பாடப் புத்தகங்கள் அமர்ந்திருக்கும்.

அவனது விடிகாலை தூக்கம் விழிப்பதுடன் இந்த சப்தங்கள் எல்லாமே எழுதப்படாத விதியாகவே தொடர்ந்து கடைபிடித்து வரப் படுகிறது.

காலை ஆறேகால் மணி கெமிஸ்ட்ரி, டியூஷன் முடிந்தால் வீடு திரும்பி விட ஏழரை ஆனால், மீண்டும் பள்ளிக்கு எட்டரைக்குள் புறப்பட்டு விடுவான். பள்ளி முடிந்த பின் அங்கேயே கோச்சிங் கிளாஸ், அதன் பின்னர் மாத்ஸ் டியூஷன்.

எல்லாமே சாவி முடுக்கி விடப்பட்ட கடிகாரம் போல் தவறாத இயக்கமாகவே இயங்கி வருகிறது.

கண்ணனுக்கு அவன் இளமை வேகத்தாலும், இயற்கையாகவே அமைந்திருந்த ஈடுபாட்டாலும், ‘சுறு, சுறுப்பாலும் அதை தவறாமல் நடத்தி வர சுலபமாகவே முடிந்தது.

இரண்டாவது படிக்கும் போது அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பேபி டீச்சர் அவனிடம் கேட்டாள்.

"கண்ணா, நீ பெரியவன் ஆனப்புறம் என்னவாக போற?"

"நான் சி..டி இன்ஸ்பெக்டர் ஆகப் போறேன் "

"அப்படியா, வெரி குட், சி..டினா யாரு சொல்லுப் பார்க்கலாம்?"

"போலிஸ்"

அதற்குள் அவனுக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவன் யார் ஆக விரும்புகிறான் என்று விசாரிக்கப் போய் விட்டாள்.

ஐந்தாவது வந்தவுடன் சி..டி இன்ஸ்பெக்டர் மேல் இருந்து வந்த ஈடுபாடெல்லாம் மறைந்து விட்டது. அதற்கு காரணம் அவன் அருகில் அமர்ந்திருந்த விக்டர்.

விக்டர் கொஞ்சம் வசதயுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவனாய் இருந்தான். அவன் வீடு, மலேசியாவில் இருந்தது. தமிழும், உறவும் தெரியாமல் போய் விடக் கூடாதே என்ற எண்ணத்தில் அவன் பாட்டி வீட்டில் தங்கி படிக்க வைத்திருந்தார்கள்.

அவன் படங்கள் போட்ட புத்தகங்கள் நிறையக் கொண்டு வருவான். கன்னன்னும், மகாபாரத, ராமாயணக் கதைகள் வரைந்த புத்தகங்களை அவனுக்கு காட்டி கதை சொல்வான்.

விக்டர் கன்னனுக்கு குதிரை பந்தயக் காட்சிகள் கொண்ட புத்தகத்தையும், கார் ரேஸ் காட்சிகள் கொண்ட புத்தகத்தையும் அந்த வருடத்தின் இறுதியில் பரிசாகக் கொடுத்து விட்டு, தான் மலேசியாவில் விடுமுறையின் போது வில்விதைகளை கற்றுக் கொண்டு அர்ச்சுனன் போல் வீரனாக திரும்பி வரப் போவதாக வாக்களித்து விட்டுச் சென்றான்.

கண்ணனும் தான் பந்தைய வீரனாக போவதாக அவனுக்கு சத்தியம் சொல்லி விடையளித்தான்.

அந்த வருட விடுமுறையில் பாதி நாட்களை கை உடைந்து, கையில் தொட்டில் கட்டிக் கொண்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்ப்பதிலேயே கழித்தான்.

அவன் தம்பிக்கு வாங்கி வைத்திருந்த ஆடும் குதிரை பொம்மையின் மேல் அமர்ந்து கொண்டு டொக், டொக் என்று வாயால் சப்தம் இசைத்துக் கொண்டே கற்பனை பந்தயங்களில் கலந்துக் கொள்வான். அம்மா பார்த்தால் பெரிய பையனாகியும் ஆடும் குதிரையின் மீது உட்கார்ந்துக் கொண்டு விளையாடுகிறே என்று கேலி செய்வாள். சில சமயம் உடைந்து விடும் என்று சொல்லி அடிப்பாள். அவன் தம்பி பார்த்து விட்டாலோ, ‘ என்று கூச்சல் செய்து வாயை மூடாமல் அழ ஆரம்பித்து விடுவான்.

ஒரு நாள் யாரும் வருவதற்குள் ஒரு சின்ன பந்தயத்தில் வேகமாக குதிரையை ஒட்டிக் கொண்டிருக்கும் போது நடந்த விபத்தில் கண்ணனின் கை உடைந்தது. குதிரைக்கு நாலு கால்களும், முகமும் உடைந்தது.

அத்துடன் அவனுக்கு குதிரை வீரனாக வேண்டும் என்ற ஆசை முடிந்து விட்டது.

பின்னர் வந்த வருடங்களில் கிரிகெட்டும், கால்பந்தும், நண்பர்களும் அவன் என்ன ஆக வேண்டும் என்ற எண்ணம் எழாதபடி அவன் எண்ணங்களை ஆக்ரமித்தார்கள்.

படிப்பு, பாட்டுக்கு படிப்பு என்று அவன் போக்கிலேயே விட்டு விட்டார்கள். அவன் பிறவியிலேயே அமைந்திருந்த புதிசாலித்தனத்தால் முதல் ஐந்து பேரில் ஒருவனாக சுலபமாக அவனால் வா முடிந்தது.

பத்தாவது முடிந்தவுடன் வீட்டில் எல்லோரும் அவன் என்ன ஆக வேண்டும் என்று முடிவெடுக்க கூடினார்கள்.

அம்மா நாம வீட்டிலிருந்து ஆடிட்டர் யாரும் இல்ல அதனால கண்ணனை ஆடிட்டர் ஆக்கலாம். காமர்ஸ் க்ரூப் சேத்தலாம் என்றாள் அக்கா.

அம்மா தன் தூரத்து சொந்தம் ஒருவர் ஆடிட்டர் ஆகியும் கூட சரியான வருமானமில்லாமல் கஷ்டப் படுவதாக தெரிவித்தாள்

ஆரம்பத்தில அப்படித்தாம்மா இருக்கும். சரி அது இல்லேனா வக்கீல் ஆக்கிடலாம். அழகா கருப்புக் கோட்டு மாட்டிட்டு போனா பாக்க எவ்வளவு அழகாயிருக்கும்.

போதுமே, உங்கம்மாவோட, அத்தையோட மாப்பிள்ளை வக்கீலுக்குத்தான் படிச்சு இருக்கார். என்ன பிரயோஜனம் அவரோட கருப்புக் கோட்ட அவர் போட்டுகிட்டு பார்த்ததேயில்ல. ஒரு வேளை குளிரடிச்சா ஸ்வெட்டர்கு பதில போட்டுகுவார இருக்கும். ஓர் சம்மர்ல மொட்டை மாடியில பார்த்தேன். அப்பளம், வடகம் எல்லாம் உலர்த்தி வெச்சிருக்கு. அது பக்கத்தில காக்கா வராம இருக்கறதுக்காக கருப்புக் கோட்ட விரிச்சு வெச்சு பயமுருத்தியிருக்கு

கடைசி வரை அவன் என்ன படிக்கலாம் என்ற முடிவுக்கு யாரும் வராமலேயே பேச்சை முடித்துக் கொண்டார்கள். கண்ணன் மட்டும் நண்பர்களுடன் SSLC என்றால் STOP STUDYING, LEARN COOKING, PASS ஆனால் காலேஜ் இல்லைனா மேரேஜ் என்று பெண்களை பற்றி அபத்தமாய் ஜோக் சொல்லிக் கொண்டு, வாய் திறந்தால் அறுவை ஜோக்கை உதிர்த்து வந்தான்.

அவன் ஆசிரியர் ஒருவர் வந்து அவனை சைன்ஸ் க்ரூபுக்கு அப்ளை செய்ய வீட்டில் தெரிவித்தார். வீட்டிலும் பணம் கட்டி அனுப்பி விட்டார்கள். எல்லாம் சுலபமாக நடந்துக் கொண்டிருந்த போது அக்காவின் திருமணம் நடந்தது.

அந்தத் திருமணத்தின் போதுதான் கண்ணனுக்கு புதிய உலகமும், வளமான கனவுகள் நிறைந்த எதிர்காலமும், எதிர்ப்பார்பும் பிறந்தது. ஒவ்வொருவர் அவன் என்ன செய்யப் போவதாய் கேட்டார்கள். எதை படித்தால் நிறைய வாய்ப்பு உண்டு என்று அவனுக்கு அறிவுரை சொன்னார்கள். எவ்வளவு மார்க் எடுக்க வேண்டும் என்று கணக்கிட்டுச் சொன்னார்கள்.

மாப்பிள்ளையின் தம்பி ஒருவன் அவனிடம் மிக சகஜமாக நெருங்கி விட்டான்.

ஹலோ கண்ணன் என்ன செய்யப் போற?”

இப்போதைக்கு நோ ஐடியா

என்னப்பா இப்படியிருக்க? வீட்ல ஒன்னும் ப்ளான் பண்ணல

இல்ல

ஒ காட். சரி நல்லா ப்ரிபேர் பண்ணி இஞ்சினீரிங் பண்ணிட்டு யு.எஸ். வந்திடு. நான் இப்ப அதுக்குதான் ப்ரிபேர்பண்ணிட்டு இருக்கேன்.

நீங்களா?”

ஆமா. இஞ்சினீரிங் இப்ப பினால் பண்ணிட்டு இருக்கேன். அடுத்த வருஷம் முடிஞ்சவுடன் ஸ்காலர்ஷிப் கிடைச்சிட்டா அப்புறம் யு.எஸ்.தான்.

அதுக்கு இங்கேயே இருந்திடலாமே

ஒ இங்கேயே இருந்திடலாமே என்று சொல்லிவிட்டு அவன் போய் விட்டான்.

அந்தக் கல்யாணம் முடிந்த பின்னர் அக்கா அவனை இஞ்சினீரிங் படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று வரும் போதெல்லாம் சொன்னாள்.

அடுத்த வருடம் விடுமுறையின் போதே அவன் கையில் இரண்டாவது வருடத்துக்கான பாடப் புத்தகங்களை கொடுத்தார்கள். அவனுக்கு கனவுகளை உருவாக்கிப் பேசினார்கள். எதிர்காலத்தை பற்றிய பிரச்சனைகளை சொல்லிக் கொடுத்தார்கள். எதிர்பார்ப்புகளை உண்டாக்கினார்கள். அவன் என்ன செய்ய வேண்டும் என்ற அவர்கள் எண்ணத்தை அவன் எண்ணமாகவே மாற்றி சிந்திக்க வைத்தார்கள்.

கண்ணனுக்கு அவை எல்லாம் சுலபமாகவே இருந்தது. வழக்கம் போல் பள்ளியும், ட்யுஷனும், படிப்புமாய், நாட்கள் கழிந்தது.

பரீச்சைக்கு ஆறு மாதம் இருக்கையில் அவன் அப்பா திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு ஒன்றால் இறந்து போனார்.

யாரும் எதிர்பார்த்திராமல் நடந்த மாபெரும் இழப்பு அது. அதிலிருந்து அவன் அம்மா மீள்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதாய் இருந்தது. அவன் தம்பிக்கோ அவர் இழப்பின் பாதிப்புகள் புரிந்து கொள்ளும் வயதும் இல்லை.

அவ்வப்போது அக்கா அவர்களை வந்து தேற்றினாள். கண்ணனிடம் அவன் குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தினாள். அம்மா துக்கத்தை மறக்கச் செய்ய வேண்டிய காரியத்தை அவனுக்கு புரிய வைத்தாள்

கண்ணன் ஒரு இஞ்சினியர் ஆவது அவன் அப்பாவின் ஆசையாக ஏற்கப் பட்டது. அவன் அவ்வாறே ஆகி அப்பாவின் ஆசைகளில் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று வீட்டில் எல்லோரும் சொன்னார்கள்.

கண்ணனுக்கு உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்று தீர்மானிக்க முடிந்தது. நன்றாகப் படித்தான். நிறைய மதிப்பெண் பெற்றான். இஞ்சினீரிங் கோர்ஸ் சேர்ந்தான்.

மற்றும் ஒரு நாள் அம்மா அவனைக் கேட்டாள். கண்ணா நீ படிச்சிட்டு வெளிநாடு போய் விடுவாயா குரலில் பிரிந்து விடுவானோ என்ற ஆதுரம் தென்பட்டது.

கண்ணன் யோசித்துச் சொன்னான் இல்லைமா

எனக்காக சொல்லாதடா. உனக்கு புத்தி சாதுரியம் இருக்கு. திறமையும் இருக்கு. ஆசையும் இருக்கு

ஆசை இருந்தது. இப்ப இல்ல. ஆனால் வெளிநாட்டில செய்யறதா இங்க செய்யப் போறேன்

என்ன செய்யப் போற?”

பாரேன் என்றான் தீவிரமான குரலில்.

அடுத்த மாதம் முதல் கல்லூரி முடிந்த பின்னர் மாலை வேளைகளிலும், இரவிலும், விடுமுறை நாட்களிலும் அருகிலிருந்த தொழிற்சாலை ஒன்றில் தான் புத்தகத்தில் படித்ததை கை மேல் கற்றுக் கொள்வதற்காக சென்றான். அவன் படிப்புக்கும் வருமானம் ஏற்படுத்திக் கொண்டான்.

எதற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று அவனுக்கு சுயமாக முதல் தடவையாக சிந்தித்து முடிவெடுக்க முடிந்தது.

மக்களின் மனப் போக்கில் மாற்றம் ஏற்பட்டால் அசைக்க முடியாத கருத்துகளும், கொள்கைகளும் மாறி விடும் என்று புரிந்து கொண்டு விட்ட வளர்ச்சி பெற்ற முழுமையான் இளைஞனாய் நின்றான் கண்ணன்.

No comments: