Sunday, December 11, 2011

saaratha a retro story

SARATHAA , RETRO STORY

சாரதா இந்த நாகரீக உலகுக்கு பொருந்தாத பெண்ணாக வளராது விட்டது அவளது குற்றமல்ல. அவளை அப்படி வளர்தியதான குற்றச்சாட்டு அவள் தாய் தந்தையைதான் சாரும். வயதுக்கு ஏற்றபடி புத்திசாலித்தனத்துடன் வளர்ந்து விட்டாளே தவிர நடைமுறைக்கு ஏற்ற சாதுர்யதுடனும், தைர்யதுடனும் அவள் வளரவில்லை என்பது அவள் தோழிகள் கணிப்பு. அதனால் அவர்களது கிண்டலுக்கும், கேலிக்கும், எபோதும் சாரதாதான் இலக்கானாள்.

உடன் படிக்கும் பெண்கள் எல்லாம் வடநாட்டவர் போல் உடை அணிந்து கொண்டு நவீனமாகிவிட, அவள் மட்டும் பழம் பஞ்சாங்கமாய் எப்போதும் பாவாடை தாவணியில் காட்சி அளித்தாள்.

பழமையை விட்டு கொடுக்காத குணம் எப்போதுமே அவளிடம் மேலோங்கி இருந்தது. உடன் படிக்கும் பெண்கள் எல்லாம் சினிமா, டிராமா என்று பேசி கொண்டு இருக்கையில், அவள் மட்டும் தான் ரசித்த கர்நாடக சங்கீதத்தை பெருமையாக சொல்லி கொண்டு இருப்பாள். பாவம், சாரதாவால் கர்நாடக சங்கீதமும் அவளது தோழிகளின் கிண்டலுக்கு இலக்கானது.

அவள் தாய் தந்தைக்கும்கூட தங்கள் பெண் சமகால பெண்களின் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க மாட்டேன் என்கிறாளோ என்று அச்சமாகத்தான் இருந்தது. அவளது நேர்மையான நடத்தையும், புத்திசாலித்தனமும்தான், அவர்களையும் அவளது ஆசிரியர்களையும் கூட அவள் மேல் மரியாதை கொள்ளும்படி செய்தது.

ஒரு நாள் அவள் பாட்டி, அவள் அப்பாவிடம் சொல்லி கொண்டு இருந்தது அவள் காதில் விழுந்தது.

நம்ம சாரதாவுக்கு கூட வயசாயிண்டே போறது. நல்ல மாப்பிள்ளையா பார்த்து முடிச்சிட்டோம்னா சரி நம்ம பொறுப்பு முடிஞ்சிடும்"

நாம என்ன முடிக்கிறது? எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான். அவன் முடிப்பான். ஏதோ அவன் தயவுல, கல்யாணத்துக்கனு யாரையும், ஒன்னையும் எதிர் பார்க்க வேண்டாத நெலமையில நம்மை வெச்சுருகான். அவளுக்கு அமையற அகமுடையான் நல்லவனா அமைஞ்சா போறாது?"

"ஆமாண்டா, இப்பதான் உனக்கே கல்யாணம் பண்ணி வச்ச மாதிரி இருக்கு. ஆமா, வருஷம் நிமிஷமா ஓடிடறது"

சாரதா கேட்டுக் கொண்டு இருக்கையிலேயே ஒரு இனம் புரியாத உணர்ச்சி அவளை ஆட்கொண்டது. தனக்கு கல்யாணம் இவ்வளவு சீக்கிரமாகவே செய்கிறார்களோ என்று தோன்றியது. தனக்கு பதினெட்டு ஆகி விட்டது, இனியும் கல்யாணம் செய்து கொள்வதில் தவறேதும் கிடையாது என்று தீர்மானித்துக்கொண்டு, தனக்கு உள்ளேயே அவர்கள் பேசி கொண்டதை பூட்டி வைத்துக் கொள்ள முடிவு செய்தாள்.

பின்னர் தொடர்ந்த நாட்களில் கல்லூரியில் அவளது அமைதி மேலும் அதிகமாகி விட்டது. பேசா மடந்தை என்று தோழியர் கிண்டல் செய்யும் அளவு ஆகி விட்டது. கூட்டமாக எல்லோரும் பேசிக் கொண்டிருக்கையில், அவள் மட்டும் என்ன பேசிக் கொண்டிருகிறார்கள் என்பதையே மறந்து கனவுலகில் ஜீவித்திரிந்தாள்.

"இன்னைக்கு நீ காலேஜ் போக வேண்டாம்மா" என்றார் அப்பா.

"இல்லைம்மா நீ மத்தியானம் மட்டும் வந்திடு"

"ஏன்மா?"

"இன்னைக்கு உன்னை பொண்ணு பாக்க வறா. தெரியுமா?"

சாரதா எதுவும் பேசாமல் மௌனமாகத்தான் நின்றிருந்தாள்.

"பாறேன், இன்னைக்கு வரப் போறவர், முதல் வைபவதிலயே உன்னைக் கல்யாணம் பண்ணிகரேனு சொல்லுவார்" என்றாள் அம்மா.

"அப்படியெல்லாம் இல்லை. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கும் முன்ன நாலு பொண்ணு பார்த்தேன் தெரியுமோ?"

"என் பெண்ணாச்சே.. அவளுக்கு என்ன குறைச்சல். வேண்டாம்னு சொல்லிடுவாரோ?"

எல்லார் வீட்டிலும் போலவே மாப்பிள்ளை வீட்டார், ஒரு டாக்சியில் பூ, பழத்துடன் இறங்கி, சொஜ்ஜி, பஜ்ஜியை சாப்பிட்டார்கள். சாரதா மாபிள்ளையின் முகத்தைக் கூட வெட்கத்தால் சரியாக பார்க்கவில்லை. பெரியவர்கள் அவ்வளவு பேர் முன்னிலையில் தலை நிமிர்ந்து பார்ப்பது இங்கிதமாக இருக்காது என்று தலை கவிழ்ந்து நின்றாள். அப்படியும் கூட அவள் முகம் பார்த்த மாப்பிள்ளை பையன் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்து சென்றான்.

பின்னர் தொடர்ந்த நாட்களில் சாரதாவுக்கு கல்லூரிச் செல்வதற்கு கூட வெட்கமாக இருந்தது. தெருவில் செல்லும் போது யாரவது, எதையாவது பேசிக் கொண்டிருந்தாள்கூட தன்னைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்று எண்ணமிட்டு சந்தோஷத்துடன் விரைவாகக் கடந்து செல்வாள்.

தோழிகளுக்கு அவளது மாறுதல் முதலில் புரியவில்லை. பின்னர் அவளிடம் துருவித், துருவி ஆராய முற்பட்டார்கள். அவர்களது கிண்டல், கேலி அதிகமாகி விடுவதோடு தன் 'அவரையும்' கலாட்டா செய்வார்களே என்று மறைக்க முயன்றாள்.

மெதுவாக அவளைப் பெண் பார்த்த விஷயமும், கல்யாணப் பேச்சுக்களும் வெளி வந்தது. அவர்களது கிண்டலுக்கும், கேலிக்கும் அளவே இல்லாமல் போய் விட்டது.

தேர்வு முடிந்தவுடன் கல்யாணம் என்று வீட்டில் தேதி குறித்தார்கள். அவளுக்கு அவர் முகம் கூட மறந்து போய் விட்டது. தனிமையில் தன்னைப் பெண் பார்த்த தினத்தையும், அவர் நேராகவே தனக்குப் பிடித்து போனதை தெரிவித்ததையும் எண்ணும் போதெல்லாம் சிலிர்த்துக் கொள்வாள்.

அந்த நினைவுகள் எல்லாம்கூட, அவளது பரிட்ச்சைக்கான ஏற்பாட்டை பாதிக்கவேயில்லை. சொல்லப் போனால் வழக்கத்தையும்விட, அவள் நன்றாகவே எழுதினாள். என்றைக்கும் தேர்வு முடிவுகளைக் கண்டு பயப்படாதவள், தேர்வு முடிவுகள் வரும் போது அவனுடன் இருப்போம் என்றே சிரத்தையுடன் படித்தாள். சிறப்பிடம் பெற்று அவன் பாராட்டை பெறுவாள் என்ற நம்பிக்கையுடன் இருந்தாள்.

ஊரைச் சுற்றி அம்மாவும், அப்பாவும் கல்யாண அழைப்பிதழலை விநியோகித்து வந்தார்கள். உறவினர்கள் வீட்டில் அவளை விசாரித்ததாக அம்மா தெரிவித்தாள். சாரதாவும் ஒப்புக்காக அவள் சொல்வதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அன்றைக்கு அப்பா அவளிடம் அவள் தோழிகளைக் கல்யாணத்துக்கு கூப்பிட்டு வா என்று பத்து அழைப்பிதழலை நீட்டினார்.

"நீயே கொடுத்துதுமா. நான் போகக் கூடாதுல்ல"

"இல்லேமா. உன் தொழிகளுகேல்லாம் நீதா தரனும்"

"அவங்களாம் வேண்டாமா. அடக்கமே இல்லாம எப்பவுமே கிண்டலும், கேலியும்தான்"

"அவங்களுக்கும் கல்யாணம் ஒன்னு ஆயிட்டா எல்லாம் சரியா போயிடும்"

"ஆமா கல்யானதுள வேற வந்து கிண்டல் பன்னுவா"

"வெட்கபட்டா கல்யாணம் எப்படி ஆகுமாம். சங்கோஜப் படாம எல்லாருக்கும் கொடுத்துட்டு வா"

"நீயும் வாயேன். எனக்கு தனிய வீடு, வீடா போய் இறங்கணும்னா போரடிக்கும்." என்றாள்

"எனக்கு வேலை இருக்கு. நீயே போய் கொடுதுட்டு வா"

அம்மாவிடம் சொல்லிக் கொண்டு தனியாகவே புறப்பட்டாள்.

முதல் தோழி வீட்டை அடைந்தவுடன் அவளும், ஆவலுடன் ஒட்டிக் கொண்டு விட்டாள். மற்ற தோழிகள் ஒவ்வருவராக சேர்ந்துக் கொள்ள, அவர்களின், கிண்டலையும், கேலியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

"இனியெல்லாம் எப்படி பேசுவாள். அவங்க வீட்டுகாரருடன் பேசுற பேச்சுதான் அவளுக்குப் பிடிக்கும்" - இதையெல்லாம் கூட ஒரு பெரிய நகைச் சுவையாக கொண்டு எல்லோரும் சிரித்தார்கள்.

"இன்று நீ எங்களுடன் திரைப் படம் வர வேண்டும்" என்று இழுத்தார்கள்.

சாரதா நேரமாகி விடும், அம்மா தேடுவாள் என்று சால்ஜாப்பு சொல்லிப் பார்த்தாள்.

"அவர் உன்னைக் கூப்பிட்டால் போக மாட்டாயா" என்று விவாதித்து த்யேட்டர் ஒன்றுக்கு இழுத்துக் கொண்டு சென்றார்கள்.

தியேட்டரில் நல்ல கூட்டம். டிக்கெட் கிடைக்காது என்று நிம்மதியாக ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தாள் சாரதா.

அப்போது ஒருவன் ஒரு பெண் குழந்தையுடன், " மிஸ், கூட்டம் அதிகமாக இருக்கிறது. பெண்கள் பகுதியிலிருந்து ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா" என்று வந்தான்.

அதற்குள் அவள் தோழிகள் வந்து விட்டார்கள். "ஏன் சார், வரிசையில் நின்று வாங்கலாமே. தனியா ஒரு பொண்ணு நின்னுட்டு இருந்தால் பேச வந்துருவீங்களே" என்று கண்டபடி பேசி விரட்டி விட்டார்கள்.

சாரதாவால் பின்னர் படம் பார்க்கவே முடியவில்லை. தன்னைப் பெண் பார்க்க வந்தவர், டிக்கெட் வாங்கித் தரச் சொன்னவராக இருக்குமோ என்று எண்ணமிட்டாள். தோழிகள் மேல் எரிச்சலாக வந்தது. எங்கே தன் திருமணம் நின்று விடக் காரணமாய் இந்த நிகழ்ச்சி அமைந்து விடுமோ என்று கலவரப் பட்டாள்.

அந்தச் சம்பவம் பற்றி யாரிடமும், அவரிடமும் கூட சொல்வதில்லை என்று தீர்மானித்துக் கொண்டாள். திருமணம் நின்று போய் விடாது என்று நம்பிக்கையுடன் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

-------

கழுத்தில் தாலி ஏறும் வரை அச்சத்துடன் தலை கவிழுந்தே உட்கார்ந்திருந்தாள். தாலி ஏறியப் பின் தைரியமாக முகம் தூக்கி ஏறிட்டுப் பார்த்தாள். அவர் முகம் கண்டவுடன் தலை கவிழ்ந்தாள். மீண்டும் ஒரு முறை அவர் முகம் காண பயந்தாள்.

அவள் தோழிகள் அவளை நன்றாகப் பார்க்கும்படி கேலி செய்தார்கள்.

மீண்டும் ஒரு தடவை அவர் முகத்தைப் பார்த்தாள்.

"என்னம்மா திரும்பித் திரும்பி பார்க்கிற. ஆம்படையான் முகத்தில் அப்படி என்னதான் கண்ட. எங்களுக்கும் சொல்லேன்" என்று சாஸ்த்ரிகள் கேட்டார்.

சாரதாவுக்கு சிரிப்புதான் வந்தது.

"இன்னும் ஒரு தடவை என் முகத்தை பார்க்கலாம்" என்று மாப்பிள்ளை சொன்னார். சாரதாவின் சிரிப்பில் மாப்பிள்ளையும் கலந்துக் கொண்டார்.

மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.

மாப்பிள்ளை மட்டும் வேறதற்கோ சிரிப்பதாக சாரதாவுக்கு பட்டது.

No comments: