Saturday, March 17, 2012

கௌரவ வேடம்


ஒவ்வொரு மாதம் முதல் தேதியிலும் கையை விட்டு பணம் முழுவதும்  செல்லும் போதே  மனசுக்குள் கணக்கு போட்டுக் கொள்வேன்.  அடுத்த மாதம் இது போன்ற செலவுக்கு எவ்வளவு சென்று விடக் கூடும் என்று.  அதனைப் பொறுத்தே அந்த மாதத்தின் செலவுகள் ஒரு கட்டுக்குள் அணைப் போட்டுக் கொள்ளப்படும்.  செலவைக் கட்டுப்படுத்த என்று என்ன செய்ய முடியும்.  அதிகம் போனால் மாதம் இரண்டு திரைப்படம் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாம்.  ஆபீசில் கல்யாணம் முதல் கருமாதி வரை கலக்க்ஷனுக்கு நோட்டு  எடுத்துக் கொண்டு அலையும் கும்பல்களின் கண்களில் படாமல் ஒளிந்து கொள்ளலாம்.  நிறைய வெளியிடங்களில் கடன் வாங்கியிருந்தால், அவர்களின் கண்களில் படாமல் தப்பி ஆபிஸ் செல்ல வேண்டும்.

நாராயணமூர்த்தி என்னைப் போன்றவன் அல்ல.  அவனுக்கும், எனக்கும் ஒரே சம்பளம்தான்.  ஆனால், அவன் என்னைப் போல் உடல் சிறுத்து, மனம் கலங்கி காணப்பட மாட்டான்.  எப்போதும், சிரித்த முகம்தான். ரயிலில் என்னுடன்தான் பாக்டரிக்கு வருவான்.  நாங்கள் எல்லோரும் தரையில் துண்டு விரித்து, விசிறி மடிப்பாய் சீட்டுக்களை கையில் வைத்துக் கொண்டு, மண்டையில் கணக்கு போட்டபடி, சண்டையும், சச்சரவுமாய் பயணிக்கையில், அவன் மட்டும், ஒரு பிரிக்கப்படாத புத்தகத்துடன், பேனாவின் பின் முனையை உதட்டில் வைத்துக் கொண்டு கண் மூடி பயனிப்பான்.

என்னிடம் உள்ள ஏதோ ஒன்று அவனைக் கவரும்படியாய் அமைந்துள்ளது என்று எண்ணிக கொள்வேன்.  அதற்கு காரணம், நாங்கள் அத்தனை பெரும் விளையாடிக் கொண்டு இருக்கும் போது, அவன் எல்லோரையும் விட்டு, விட்டு என்னிடம், மட்டும் பேசியதுதான்.  மூன்று மாத பழக்கத்தில் என்னைப் பற்றிய விபரங்கள் அத்தனையும் அவனுக்கு பரிச்சயமாகி விட்டது.  என் சுபாவம் அப்படி.  அதே சமயம் அவனைப் பற்றிய விஷயங்களில் என்னகு அவ்வளவாக அக்கறை கிடையாது.

ஹலோ, கேசவமூர்த்தி சார்.  என்ன இவ்வளவு நாளாக உங்களை ட்ரெயினில் பார்க்கவே முடியவில்லையே என்று கான்டீன் செல்லும் வழியில் நாராயணமூர்த்தி கேட்டான்.

எனக்கு சட் என்று என் பெயரும், அவன் பெயரும் கிட்டதட்ட ஒன்றாகவே உள்ளதால்தான் ஒரு நெருக்கம் உண்டாகி உள்ளதாகத் தோன்றியது.

ஒன்றுமில்லை. சும்மா, அம்மாவையும், அப்பாவையும், சொந்தக் காரங்களையும் பார்த்து நாளாகி விட்டது.  அதுதான் ஊர் வரைக்கும் போயிட்டு வந்தேன்.  அவனிடம் எப்படி சொல்ல முடியும்? கடன் தொல்லை தாங்காமல் ஆபிஸ் பக்கம் தலை காட்ட முடியவில்லை என்று.  நாய்க்கு, கொஞ்சம் ரொட்டி துண்டு வீசுவது போல, கடன்காரர்களுக்கு தற்போதைக்கு சமாதானம் செய்ய காசு வாங்கத்தான் ஊர் சென்றேன் என்று.

அம்மா, அப்பா எல்லோரும் எப்படியிருக்காங்க?  சௌக்கியம்தானே.  என்னைப் பற்றியும் சொல்லியிருப்பீங்களே

ம் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன்.  அவனது வார்த்தைகளோ மிகவும் சோம்பல் தருவதாய் இருந்தது.  அதிகமாக பேச மாட்டான்.  பேச ஆரம்பித்தாலோ எப்போது நிறுத்துவான் என்று யோசிக்கும்படியான பேச்சு.

காலையில உங்களை ட்ரெயின்ல பார்க்க முடியல.  ஆகா மொத்தம்  இன்றோடு சேர்த்து நீங்க லீவ் எடுத்து பதினாலு நாள் ஆச்சு என்று கணக்கு போட்டுகிட்டு இருந்தேன்.  இங்க வந்து பார்த்தா நீங்க இருக்கீங்க.  ட்ரெயின் மிஸ் செஞ்சுட்டீங்களா?  அப்போ நீங்க பதினஞ்சு நாள்தான் லீவ் எடுத்திருக்கீங்க?  என்றான்.

ஆமாம்.  இன்னைக்கு பஸ்ல வந்திட்டேன் என்றேன்.

அப்பாடா.  ட்ரெயின்னுக்கு பாஸ் எடுத்திட்டு, பஸ்ல வரலாமா சார்.  ரெண்டு செலவு.  பிரயாணமும் சுகப் படாது.  கொஞ்சம் முன்னாடியே புறப்பட்டு இருக்கலாமே  என்றான்.

நான் ஊரிலிருந்து, நேரா ஆபிஸ்தான் வரேன் என்றேன்.

அப்ப, குளியல் எதுவும் இன்னமும் ஆகல போல

இல்ல, வழியில, பஸ் ஸ்டாண்ட்லேயே எல்லாம் ஆயாச்சு என்றேன்.

இன்னமும் அவனுக்கு வேண்டிய விஷயம் எதுவும் இல்லை என்பதால் என்னை விட்டு அகன்றான்.  எனக்கு எரிச்சலாக இருந்தது.  என்னை மட்டும் ஏன் இப்படி துரத்தி, துரத்தி அறுத்து, எடுக்கிறான்.  ஏற்கனவே உள்ள கடன்காரப் பாவிகளின் தொல்லை போதாது என்று இந்தக் கழுத்தறுப்பு கேஸ் வேறு.  என் நெற்றியில் பட்டயமாய் இளிச்சவாய்ப் பேர்வழி என்று ஒட்டியுள்ளது என்று எண்ணிக கொண்டேன்.

இல்லாவிட்டால், சும்மா வேலைக்கு வந்துக் கொண்டு இருந்தவனைக் கை குறைகிறது என்று சொல்லி சீட்டாட்டத்தில் உட்கார வைத்து மொட்டையடிப்பார்களா அல்லது எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு என் பெயரில் செலவு எழுதி, எனக்கே கடன் கொடுத்து, தோளில் துண்டு பிடித்து இழுக்காத குறையாக வசூல் செய்ய முனைவார்களா?

எது எப்படி ஆனாலும் சரி.  இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றுதான் எல்லா ஸ்டேஷன்களில் உள்ள புகார்ப் பெட்டியில், மின்சார ரயிலில் சீட்டாடும், குடிகார கும்பலின் தொந்தரவு அதிகமாகி விட்டது என்று ஒரு மொட்டைக் கடிதத்தை எழுதி போட்டு விட்டேன்.  அன்றைக்கே ஊருக்கும் சென்று விட்டேன்.  இப்போது பதினைந்து நாட்களாகி விட்டது.  அட, அதைப் பற்றி நாரயனமூர்த்தியிடம் விசாரிக்க மறந்து விட்டேனே என்று தோன்றியது.

ஆபிசில் அதைப் பற்றி எதுவும் விசாரிக்க முடியவில்லை.  ஆபிசில் சீடடில் உட்கார இருப்புக் கொள்ளவில்லை.  என்னுடைய சீட்டாட்ட நண்பர்களாய்ச் சேர்ந்து, என் மானத்தையும், மரியாதையையும் இழக்கக் கூடிய கட்டத்துக்கு என்னை இழுத்துச் சென்று விட்ட அந்த நால்வர்களும் என்ன ஆனார்கள் என்று தெரிந்துக் கொள்ள ஆவலாய் இருந்தது.

என் முட்டாள்த்தனமான செய்கைக்கு அவர்களை தண்டனை பெறச் செய்வதில் என்ன நியாயம் உள்ளது என்று எனக்குத் தோன்றியது.  ஆனால், மற்றும் ஒரு அப்பாவி ஒருவனை இந்தச் சாக்கடையில் தள்ளி விடுவார்கள் என்று என்னும்போது என் செய்கைக்கு நியாயம் கற்பித்துக் கொள்ள முடிந்தது.

ஊரில் இம்முறை அம்மாவிடம் உண்மையைச் சொல்லித்தான் பணம் பெற்றுக் கொண்டேன்.  அம்மா கூட அதற்குச் சொன்னாள்.
நல்ல வேளை.  உன்னிடம் இன்னமும் கூட கொஞ்சம் நல்ல புத்தி இருக்கிறதே என்பதில் சந்தோஷம். குற்றத்தைச் செய்து விட்டு அதனை ஒப்புக் கொள்வதற்கு தைரியம் மட்டும் போதும்.  ஆனால், அதிலிருந்து நீ மீள்வதற்கு ஏதாவது ஒரு எண்ணம வைத்திருக்கிராயா?

எனக்கு சட்டென்று உரைத்தது.  அம்மா அவ்வளவு நீளமான வசனங்கள் பேசுபவள் அல்ல,

தலை குனிந்து இல்லை என்ற பாவனையில் மௌனம மட்டுமே சாதிக்க முடிந்தது.

சரி. இத்துடன் போகட்டும் என்று தலை முழுகி விடு. ஆனால், நீ ஒழுக்கமானவனாக இருந்தால்தான் நான் உனக்கு அம்மா  என்பதில் அர்த்தம் இருக்கும்.  எனவே, இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.  கவனமாயிரு.


எனக்கு உணர்ச்சி வேகத்தில் கைகள் நடுங்க, அவள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டேன்.  கண்களில் துளிர்ந்த கண்ணீர் அவள் கரங்களில் விழ என் மோவாய் நிமிர்த்தி முகம் நோக்கினாள்.

அவள் கண்களைக் காணும் திராணியும் கூட எனக்கு இல்லை.  அவளுடைய நம்பிக்கைகளை எல்லாம் பொய்க்கச் செய்து விட்டவன் போல அழுது நின்றேன்.  எனக்கு அவ்வளவு சக்தி எப்படி வந்ததோ என்று எண்ணும்படியாய் என் கையை அவள் தலையில் வைத்து சத்தியம் செய்தேன்.  இனிமேல், குடிக்கவும் போவதில்லை. சீட்டு விளையாடுவதும் இல்லை என்று.

அம்மா சொன்னாள். உனக்கு சந்தோஷம் அளிப்பதை எனக்காக சத்தியம் செய்துக் கொண்டு விட்டு துன்பப்பட வேண்டாம்.  மெதுவாக விடு போதும்.  ஆனால், உன் ஒவ்வொரு செய்கைகளிலும் என்னுடைய வார்த்தைகள் நினைவிலிருக்கட்டும்

இன்றைக்கு சாயந்தர ட்ரெயின்னில் அவர்களைப் பிடித்து விடலாம் என்று எண்ணினேன்.  நான் பிடிக்காவிட்டாலும், அவர்கள் என்னப் பிடித்து விடுவார்கள் அல்லவா.  எனக்கெனவோ உடனடியாக அவர்கள் பழக்கத்திலிருந்து விடுபட்டு விட வேண்டும் என்று தோன்றியது.

ஆபிசில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு நாள் போலக் கழிந்துக் கொண்டிருந்தது. சீட்டுக்கு வந்து அரட்டையடித்தாலும் மனதில் எதுவுமே பதியவில்லை.  யாருக்கு அடுத்த பதவி உயர்வு என்ற பயங்கர விவாதம் நடந்துக் கொண்டிருந்தது..  நானும் அதற்கு ஒரு கண்டண்டர் என்பதால் என் பெயரும் அவர்கள் பேச்சில் அடிபட்டுக் கொண்டிருந்தது.  ஆனாலும், அந்தப் பேச்சுக்கள் எல்லாம் எனக்குள் ஒரு உணர்வையும் தூண்டவில்லை.  அந்த நால்வரையும் எப்போது காண்பேன் என்ற எண்ணம்தான் மனசு முழுவதும் வியாபித்தது.

ரயிலில் இரண்டாவது ஸ்டேஷணில்தான் அவர்கள் ஏறுவார்கள். வழக்கமாக எப்போதும் மூன்றாவது பெட்டியில்தான் எங்கள் குழுவுக்கு இருக்கை.  என் எதிர்ப்புறம் நாராயணமூர்த்தி அமர்ந்துக் கொண்டான்.  விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவனுடந்தான் பிரயாணத்தை கழிக்க வேண்டியுள்ளது.

என்ன கேசவமூர்த்தி, உங்க நண்பர்களை எதிர்பார்க்கறீங்களா என்று கேட்டான்.

ஆமாம் என்றேன் சுருக்கமாக.  என் மனதுக்குள் மின்னலடிதது.  என் மொட்டைக் கடிதம் எதாவது வேளை செய்திருந்தால் அதைப் பற்றிய விஷயங்களை இப்போது கேட்க முடியும் என்று.

சார் ஒரு சின்ன வேண்டுகோள் என்று ஆரம்பித்தான் நாராயணமூர்த்தி.

என்ன சொல்லுங்க?

என்னையும் உங்க குழுவில சேத்துக்குங்க சார்

அடப்பாவி என்று வார்த்தை வாய் வரைக்கும் வந்து விட்டது.  அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்து விட, அடித்து பிடித்துக் கொண்டு பிரயாணிகள் உள்ளே நுழைந்தார்கள்.  வெளியிலிருந்து டேவிட்தான் என்னை முதலில் பார்த்தான்.

டேய் கேசவமூர்த்தி. எங்கட ஊரை விட்டு ஓடிப் போயிட்ட  என்று அட்டகாசமாக சொல்லி என் தோளைத் தட்டினான்.

சார் இங்கெல்லாம் ஆள் வருது.  யோவ்  எழுந்திருயா  என்று அதட்டி சீட்டின் மீது செய்தித்தாள்களை விரித்தான்.


பாண்டியன், மோகன், ராஜேந்திரன் மூவரும் உள்ளே நுழையும் போதே, என்னைக் கேவலமாக பார்த்தார்கள்.

கதையெல்லாம் அப்பறம் பேசலாம்.  கச்சேரியை ஆரம்பியிங்கப்பா என்று மோகன் தன மடியில் டவல் விரித்து ஐந்து கைக்கு சீட்டுப் போட ஆரம்பித்தார்கள்.

வேண்டாம் என்று தீனமான குரலில் சொல்லிக் கொண்டே என் கையில் எடுத்துக் கொண்டேன்.  அம்மாவின் தீர்மானமான சொற்கள் காதுகளில் ஒலித்தது.

என்ன செய்யப் போகிறேன்?..

எதிரே நாராயணமூர்த்தி கண்களால் பேசினான்.  எனக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றுதான்.  சட்டென்று என் சீட்டை அவனிடம் கொடுத்து விட்டேன்.

தேங்க்ஸ் சார்

என்னப்பா.. நீ விளையாடல என்றான் டேவிட்.

இவருக்கு பதிலாக, அவர் விளையாடி கோட்டை விட்டதெல்லாம் அவர் பிடித்துத் தரப் போகிறாராம்.  நம்ம ஆட்டத்தைதான் இத்தனை நாள் பார்த்துக்கிட்டே இருக்கர்ரில்ல. என்று ஏளனமாகச் சொன்னான் பாண்டியன்.

என்ன சார். சும்மா பேசிக்கிட்டு உங்களுக்குத் தர வேண்டியதெல்லாம் சென்ட்ரலில் தரப் போறேன்.  இப்ப எனக்கு தலை வலிக்குது.  அடுத்த கம்பார்ட்மண்ட் போறேன். என்று எழுந்துக் கொண்டேன்.

எங்கே ஓடிப் போயிட முடியும் பார்க்கலாம்பா என்றான் டேவிட்.  அவர்கள் மீண்டும் ஆட்டத்தில் மும்முரமானார்கள்.  அடுத்த ஸ்டேஷனில் அவ்வளவாக கூட்டமில்லை.  கீழே இறங்கினேன்.  உள்ளேயிருந்து இறங்குபவர்கள் இறங்கினார்கள்.  மூன்று போலிஸ்காரர்கள் உடுப்புடன் என் பெட்டியில் ஏறினார்கள்.  எனக்கு பயமானது.  என்னுடைய புகாருக்கு இன்றுதான் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்.  நான் மீண்டும் அதே பெட்டியில் ஏறிக கொண்டேன்.

அந்தப் போலிஸ்காரர்களின் வேகம் அச்சத்தை உண்டாக்குவதாய்  இருந்தது.  சடாரென்று விளையாடிக் கொண்டிருந்தவர்களின் பிடரியில் தட்டி, அவர்கள் கையிலிருந்த சீட்டுக் கட்டுக்களை பிடுங்கி தரையின் மீது வீசி எறிந்தார்கள்.  அவர்களது சட்டைக் காலரில் கை வைத்து கொத்தாக எழுப்பி நிற்க வைத்தார்கள்.

எனக்கு பார்க்க பரிதாபமாயிருந்தது.  நாராயணமூர்த்தியின் நிலையை எண்ணும் போது இன்னமும் வருத்தமாக இருந்தது.  அவனது இடத்தில நான் அல்லவா இருந்திருக்க வேண்டும்.  என்னுடைய இந்த கௌரவமான நிலையை எண்ணும் போது மனசுக்குள் அம்மாவின் ஞாபகம்தான் வந்தது.

சார் படிச்சவங்காலா இருந்துகிட்டு சீட் விளையாடறீங்களே ட்ரெயினல.  இது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா  என்று சொல்லிக் கொண்டிருந்த போலிஸ்காரர் என் புறம் திரும்பினார்.  சார் பார்த்தீங்கள எல்லோரும் வேலையில்லாத பசங்க இல்ல.  பக்கத்து தொழிற்சாலையில வேலை செய்யற தொழிலாளிங்க.  ஏன் இவர்களில் ஒரு சிலர் உங்க கூட வேலை செய்பவராகக்கூட இருக்கலாம்.  ஒரு குற்றவாளியோ, சமூக விரோதியோ உருவாகிறதுல ஆரம்பக் கட்டம் இந்த மாதிரி சூதாட்டங்களை பொதுமக்கள் முன்னாடி கவலையில்லாம விளையாடறதுதான்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  அவர்கள் உடனடியாக அபராதம் கட்ட வேண்டும்.  அல்லது அவர்களுடன் போலிஸ் ஸ்டேஷன் வரை சென்று வர வேண்டும்.  காவலில் இருக்க வேண்டும் என்ற பயங்கரமான சூழலில் இருந்து தப்பி விட்டேன் என்று எண்ணிக கொண்டேன்.


கையில் அவர்களுக்கு நான் தர வேண்டிய கடன் தொகை இருந்தது.  அதனை எடுத்து போலீசிடம் கொடுத்தேன்.  அவர்களது அபராதத் தொகைக்காக.

சார் நீங்க எதுக்கு சார் தரனும்  என்றவர்.  ஒரு வேளை உங்களுக்கு தெரிஞ்சவங்கலாயிருக்கலாம் என்று சொல்லிக் கொண்டே பணத்தை வாங்கிக் கொள்ள தயாரானார். போலிஸ்காரர்.  பின்னர் ரசீது எழுதி என் கையில் கொடுத்தார்.

இனிமே இந்த ஐந்து பேருமே சீட்டு விளையாட மாட்டாங்கங்கறதுக்கு நான் உத்தரவாதமில்ல.  ஆனால், அப்படி விளையாடினா அவங்க ஒரு பொறுப்புள்ள தொழிலாளிங்கற வார்த்தைக்கே இழுக்கா நான் நினைக்கிறேன். என்றேன்.

நாராயணமூர்த்தி கண்களில் நீர்த்துளியுடன், சார் ரொம்ப நன்றி.  என்னக்கு நீங்க தெய்வம் மாதிரி என்றான்.

நான் சட்டென்று தெய்வமா?, நானா?

என் தெய்வம் கிராமத்திலிருக்கு என்றபடி பெட்டியை விட்டு இறங்கிச் சென்றேன் பூங்கா ஸ்டேஷன் நோக்கி.

No comments: